டெல்லி: ஐபிஎல் போட்டி தொடரில் கலந்துகொள்ளும் சில வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடுமையான பயோ பபுளை பின்பற்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயோ பபுள் என்றால் என்ன?

இந்தியாவில் கொரோனா பரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பாதிப்பு 1.26 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மகாராஷ்டிரா அரசு இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் லாக்டவுனை அறிவித்துள்ளது. அதேபோல மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள நாளை முதல் மே 30 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்தச் சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சில அணிகளுக்கு மட்டும் சொந்த மண்ணில் பங்கேற்கும் அட்வான்டெஜ் கிடைத்தால் சரியாக இருக்காது என்பதால் அனைத்து அணிகளுக்கும் அனைத்து போட்டிகளும் நியூட்டிரல் மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் அக்சர் பட்டேல், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, டேனியல் சாம்ஸ் என வரிசையாகப் பல வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. இவர்களில் தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் பெங்களூரு அணியைச் சேர்ந்தவர்கள். இதனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பயோ பபுள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐக்கிய அமீரகத்தில் ஐபில் தொடர் நடைபெற்ற போதும், இந்த பயோ பபுள் முறை பின்பற்றப்பட்டது. சரி அது என்ன பயோ பபுள்? கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அப்போது முதலில் இங்கிலாந்திற்கும் – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர் பயோ பபுள் முறையைப் பின்பற்றி நடத்தப்பட்டது.

அதாவது தொடர் முழுவதும் வீரர்கள், நடுவர்கள், ஒளிபரப்பு குழு, அணியின் நிர்வாக ஊழியர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் இந்த பயோ பபுளில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். பயோ பபுளில் பட்டியலிடப்பட்டுள்ள மைதானம், ஹோட்டல், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட இடங்களுக்கும் மட்டுமே இவர்கள் செல்ல அனுமதி உண்டு. அதேபோல பயோ பபுளுக்கு வெளியே இருப்பவர்கள் யாரையும் இவர்கள் சந்திக்கக் கூடாது.

அதேபோல பயோ பபுளில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களது உடல் வெப்பம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் .. கடந்த ஐபிஎல் சீசனுன் இப்படி தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. இதே முறையில் தான் இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

இருப்பினும், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாகப் போட்டிகளின் போது வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் ஏற்பட்டது. அனைத்து போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என்பதாலும் பயோ பபுள் கடுமையாகப் பின்பற்றப்படும் என்பதாலும் போட்டிகள் நடைபெறுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Ref: https://tamil.oneindia.com