ஐபிஎல் தொடரின் 5 வது லீக் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது. மும்பை அணியின் பேட்டிங் பலமாக இருந்ததால் 159 ரன்கள் அடித்த போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

மும்பை அணி குறிப்பாக 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டிய அணியில் இருந்தும் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை அவர் கடைசி ஓவரை வீசியிருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கோமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு விளக்கம் அளித்த மும்பை அணி நிர்வாகம், ஹர்த்திக் பாண்டியா பந்துவீச முழு உடற்தகுதியுடன் இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பந்துவீச்சு பிரச்னையை சரிசெய்ய தானே களமிறங்கிவிட்டார் போல ரோகித் சர்மா. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா பயிற்சியின் போது பந்துவீச்சுக்கு பயிற்சி எடுத்து வருவது போல் உள்ளது. இது விளையாட்டாக பார்க்கப்பட்டாலும், அணிக்கு தேவையான போது ரோகித் சர்மா பார்ட் டைம் பவுலராக இருப்பாரோ என்ற கேள்வியையும் ரசிகர்களிடையே சீரிய்ஸாக எழுப்பியுள்ளது.

தனது முதல் போட்டியில் வழக்கம் போல தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 வது ஆட்டம் முதல் வேகமெடுக்க காத்துள்ளது. அதே போல முதல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அசத்திய கொல்கத்தா அணி, அந்த வேகத்தை அப்படியே தொடர வேண்டும் என்ற நோக்கில் களமிறங்குவதால் போட்டியி விறுவிறுப்பு அதிகமாகவே இருக்கும். இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்து, அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 முறை வெற்றிபெற்றுள்ளது. இதனால், இன்றையப் போட்டியில் மும்பை ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகிறது.

Ref: https://tamil.mykhel.com